Skip to content

கிரகங்களின் ஆதிபத்யம், உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள்

ஜோதிடத்தில் கிரகங்கள் தாங்கள் பெற்ற ஆதிபத்யம் மற்றும் தான் அமர்ந்துள்ள வீட்டில் இருக்கும் பலம் (அ) பலவீனத்திற்கேற்றவாறு பலன்களை அளிக்கின்றனர்.

 

ஆதிபத்யம் என்பது ஒவ்வொரு லக்னத்திற்கேற்றவாறு மாறுபடும்.  கிரகங்களின் பலம் என்பது தாங்கள் அமர்ந்துள்ள வீடு உச்சம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் ஆகிய நிலைகளுக்கு ஏற்றவாறு பலன்களை தருகின்றன.

 

கிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  ஆனால் நட்பு, சமம், பகை போன்ற நிலைகளை தெரிந்து வைத்திருப்பது என்பது ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு சற்று தடுமாற்றத்தை தரும்.

 

அதற்கான ஒரு சூத்திரம் கீழே தந்திருக்கிறேன் பாருங்கள்.

 

1.  கிரகங்கள் தாங்கள் மூலத்திரிகோணம் அடையும் ராசிகளுக்கு 2,12, 4, 5, 8, 9 ஆகிய வீடுகள் நட்பு வீடுகளாகும்.

2.  ஏனைய வீடுகள் (3,6,7,10,11) பகை வீடுகளாகும்.  இவற்றில் ஒரு வீடு நட்பாகவும் மற்றது பகையாகவும் இருந்தால் அது சம வீடாகும்.

3. கிரகங்கள் உச்சம் அடையும் வீட்டிற்கு அதிபதியான கிரகத்தின் மற்றொரு வீடு பகையாக வந்தாலும் சமம் என்று கொள்ள வேண்டும்.

 

இதற்கு உதாரணம் தருகிறேன் பாருங்கள்:-
சூரியன் உச்சம் அடைவது மேஷ ராசி
நீசம் அடைவது அதற்கு 7-ம் வீடான துலா ராசி
ஆட்சி பெறுவது சிம்ம ராசி
மூலத்திரிகோணம் பெறுவதும் சிம்ம ராசி

 

எனவே சிம்மத்திலிருந்து 2, 12, 4, 5, 8, 9-ம் வீடுகள் நட்பு ராசிகளாகும்  சூரியனுக்கு 2ம் வீடாக கன்னி ராசி வருவதால் புதன் முதலில் நட்பாக வருகிறார்.  பின்பு 11ம் வீடாக மிதுனம் வருவதால் அது பகை என வருகிறது.  எனவே ஒரு நட்பும், பகையும் கலந்து வருவதால் சூரியனுக்கு புதன் சமம் என்ற நிலையைப் பெறும்.

 

எனவே சூரியன் மிதுன, கன்னி ராசிகளில் சமம் என்ற நிலையை அடைகிறார்.

 

செவ்வாய் உச்சம் பெறும் ராசி மகரம்.  அதன் மூலத்திரிகோண ராசி மேஷம் எனவே சூத்திரத்தின் படி மேஷத்திலிருந்து 10, 11ம் வீடுகளாக வரும் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் செவ்வாய் பகை பெற வேண்டும்.  ஆனால் மகரம் உச்ச வீடாக வருவதால் மற்றொரு வீடான கும்பம் பகை என்ற நிலை பெறாமல் சமம் என்ற நிலையைப் பெறுகிறது.

 

இதே முறையில் மற்ற கிரகங்களுக்கும் நட்பு, பகை, சமம் ஆகிய நிலைகளை எளிதாக அறிந்துகொள்ளலாம்.

 

மூலத்திரிகோண ராசிகள்
சூரியன் – சிம்மம்
சந்திரன் – ரிஷபம்
செவ்வாய் – மேஷம்
புதன் – கன்னி
குரு – தனுசு
சுக்கிரன் – துலாம்
சனி – கும்பம்.

இதில் சூரியன், மற்றும் புதன் தங்களது ஆட்சி வீட்டிலேயே மூலத்திரிகோணம் அடைகின்றன.

சந்திரன் உச்ச வீடான ரிஷபத்தில் மூலத்திரிகோணம் அடைகிறார்.

மற்ற கிரகங்கள் தங்களது இரண்டு வீடுகளில் ஆண் ராசிகளில் மூலத்திரிகோணம் அடைகின்றனர்.

மூலத்திரிகோண நிலை என்பது உச்சம் மற்றும் ஆட்சி நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும்.  இங்கு முக்கால் பங்கு வலிமையுடன் செயல்படும்.

ராகு, கேதுக்களுக்கு பல அபிப்ராய பேதங்கள் இருப்பதால் மூலத்திரிகோண வீடுகளை குறிப்பிடப்படவில்லை.  ஆனால் ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் உச்சமடைகிறார்கள் மற்றும் ராகு விருச்சிகத்தில், கேது ரிஷபத்தில் நீசம் பெறுகின்றனர் என்பதை ஏறக்குறைய பல ஜோதிடர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  அனுபவத்திலும் சரியாகவே வருகிறது.

அது போலவே கடகம், மகரம் ஆகிய ராசிகளில் ராகு, கேதுக்கள் இருக்கும் போது விஷேஷமான பலன்களை தருகின்றனர்.  கடகத்தில் மூன்று வேதங்களும், மகரத்தில் 1 வேதமும் இருப்பதாகவும் அங்கு பாம்புகள் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல சாஸ்திர ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் அல்லது உலக வாழ்க்கையில் நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது விதி.

கிரகங்கள் ராசியிலும் அம்சத்திலும் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியம்.  ராசியில் வலிமை பெற்று அம்சத்தில் வலிமை குறைந்தால் பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.  ராசியில் வலிமை குறைந்து அம்சத்தில் வலிமை பெற்றால் பாதியளவு பலன்களாவது கிடைக்கும்.

எனவே ராசி, அம்சம் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

தீய ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் வலிமை குறைந்தும், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்றும் இருக்க வேண்டும்.

பகை கிரகங்களின் நட்சத்திர சாரம் பெற்றாலும் தனது ஆதிபத்ய பலன்களை சரிவர கிரகங்கள் அளிப்பதில்லை.
error: Content is protected !!