மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.
இரண்டு சொற்களையும் சேர்த்தால் மரணயோகம்.
மரணத்தை எப்படி யோகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா?
ஜோதிடத்தில் அது உண்டு.
நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று மரண யோகம் என்று போட்டிருப்பார்கள்.
எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?
பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.
சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.
எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?
கீழே கொடுத்துள்ளேன்.
ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்
மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.
மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.
உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம் மாட்டிக் கொண்டுவிடும்.
மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.
சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.
பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.
மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும்.
ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.
சரி, அன்று என்னதான் செய்யலாம்?
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.
இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.