Skip to content

புரட்டாசி சனி படையல்

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் பெருமாளுக்கு சிலர் பலவகை உணவுகளை படைத்து வழிபாடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளி சாதல், மிளகு சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், எள்ளு சாதம், கொண்டைக்கடலை சுண்டல், உளுந்த வடை, மிளகு வடை செய்வார்கள். சனிக்கிழமை தாளிகை என்று சொல்வார்கள். இந்த படையலுக்கு செய்யும் உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்க மாட்டார்கள். பெருமாளுக்கு தூய பச்சரிசி மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

திருப்பதி ஏழுமலையான்

பல கோடி சொத்துக்களின் அதிபதியாக இருக்கும் ஏழுமலையானுக்கு தினந்தோறும் கோடி கோடியாக உண்டியல் காணிக்கை சேருகிறது என்றாலும் அவருக்கு படையல் மண்பானையில் வைக்கப்படும் தயிர்சாதம்தான். மன்னன் கொடுத்த தங்கப் பூ மாலையை விட மண்ணால் குயவர் செய்த மாலையை அன்போடு ஏற்றுக்கொண்டவர் திருப்பதி ஏழுமலையான்.
ஏழுமலையான் கோவில்
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பக்தியோடு பாசமும் அதிகம். ஏழுமலையான் திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுந்தது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

சனிக்கிழமை விரதம்

பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள் புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

மண் பூக்கள் அர்ச்சனை

பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இப்படி தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாத நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

உண்மையான பக்தி

இது இப்படியிருக்க குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே நீயும் செய்து பார் அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிக்கொண்ட தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி. உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

புரட்டாசி சனி மகிமை

ஏழுமலையான் அன்றைய தினம் பீமய்யனின் கனவிலும் தோன்றினார். அதைப்பார்த்த பீமய்யாவின் மெய்சிலிர்த்தது. உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்திற்கு அழைத்துக் கொள்வேன் எனக் கூறியிருந்தார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.

மண்பானை தயிர்சாதம்

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது. பெருமாளின் ஆணைப்படி அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். முடிந்தவர்கள் திருப்பதிக்கே சென்று ஏழுமலையானை வணங்கலாம். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். பெருமாள் உண்மையான பக்தியை ஏற்றுக்கொள்வார்.

error: Content is protected !!